நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு Intangible Cultural Heritage left புதிய தேசிய அடையாள அட்டையை வெளியிட்டு வைத்தல்

புதிய தேசிய அடையாள அட்டையை வெளியிட்டு வைத்தல்

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய கச்சிதமான புதிய தேசிய அடையாள அட்டை (SMART Card), உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு எஸ்.பி. நாவின்ன அவர்களின் தலைமையில், 2017 ஒக்றோபர் மாதம் 27 ஆம் திகதி ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் போது இப் புதிய கச்சிதமான தேசிய அடையாள அட்டை (SMART Card), முதன் முதலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதனை அடையாளப்படுத்தும் வகையில், மாண்புமிகு அமைச்சர் அவர்களினால் பொதுமக்கள் பத்துப் (10) பேருக்கு இப் புதிய கச்சிதமான தேசிய அடையாள அட்டை (SMART Card) வழங்கி வைக்கப்பட்டது.

இப் புதிய தேசிய அடையாள அட்டை, பன்னிரண்டு இலக்கங்களைக் கொண்ட அடையாள அட்டை இலக்கத்தையும், சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் (International Civil Aviation Organization – ICAO) தர நிர்ணயங்களுக்கு அமைய எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், இயந்திரத்தினால் வாசிக்கக் கூடிய குறியீட்டுக் கீற்றையும் (Barcode) கொண்டதாக இருக்கும். இதில் பெயர், பிறந்த இடம், முகவரி, பால் முதலான தகவல்கள்/ விபரங்கள் மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டிருக்கும் என்பதுடன், இதில் அடையாள அட்டை உரிமையாளரின் கையொப்பத்தை உட்சேர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று இக் கச்சிதமான அட்டை (SMART Card) சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரநிர்ணயங்களுக்கு அமைவாக இருப்பதுடன், இதன் மூலம் பொது மக்களுக்கு மிக இலகுவாகவும், விரைவாகவும் சேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.

உத்தேச இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையின் (e-NIC) முதலாவது கட்டமாக இப் புதிய கச்சிதமான அட்டை (SMART Card) விநியோகிக்கப்படுவதுடன், இதன் இரண்டாவது கட்டத்தில் பிரதான உயிர்மானத் தரவாக உள்ள கைவிரல் அடையாளத்தை, உத்தேச இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் உட்சேர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இக் கச்சிதமான அட்டை (SMART Card) அறிமுகம் செய்யப்படுவதினூடாக, இதுவரை பாவிக்கப்பட்டு வரும் தேசிய அடையாள அட்டை இரத்தாக மாட்டாதென்பதுடன், 2017 ஒக்றோபர் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் திணைக்களத்திடம் முன்வைக்கப்படுகின்ற விண்ணப்பப்படிவங்களுக்கு இக் கச்சிதமான அட்டையை (SMART Card) விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

 

© 2018 உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.